25% ஆலைகள் மூடல்.. அரிசி விலை உயரும் அபாயம்: அரசு தீர்வு காண தென்காசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை

Priya
910 Views
2 Min Read

உற்பத்தி செலவு அதிகரிப்பால், தென்காசி மாவட்டத்தில் 25 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காலம் தவறி பெய்யும் பருவமழை, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது போன்ற காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் நெல் மகசூலில் பற்றாக்குறை மாநிலமாகவே தமிழகம் உள்ளது.

இதனால், தனியார் அரிசி ஆலைகள் தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து நெல் அல்லது அரிசியை வாங்குகின்றன. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டாரங்களில் சுமார் 130 அரிசி ஆலைகள் இயங்கிவந்தன. கடந்த சில மாதங்களாக உற்பத்தி செலவு அதிகரிப்பால், அரிசி ஆலைகள் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.

இதுகுறித்து தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் சி.அன்பழகன் கூறியதாவது: தமிழகத்தில் அதிக நெல் விளைச்சல் தரும் டெல்டா மாவட்டங்களில், கார் சாகுபடி பொய்த்ததால் நெல் உற்பத்தி குறைந்துவிட்டது.

இங்கு குறைந்தளவு உற்பத்தியாகும் நெல்லையும் கொள்முதல் செய்யும் அரசாங்கம், அதை முறையாக பாதுகாக்காமல் மழையில் நனையவிட்டு வீணாக்குகிறது. இதனால், தனியார் ஆலைகள், வெளி மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து நெல் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் அதிக கடன் பெற்று, ஆலைகளில் அதிநவீன இயந்திரங்களை நிறுவியுள்ளோம். வங்கிக்கடன் வட்டி உயர்ந்துவிட்டது. மின் கட்டண உயர்வு ஆண்டுக்கு 6 சதவீதமும், மின் நிலுவைக் கட்டணம் எல்.டி. இணைப்புக்கு வாட்டுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.170 ஆகவும் உயர்ந்துள்ளது. தொழிலாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து, உணவு மற்றும் தங்கும் வசதி செய்து கொடுத்து, ஆலைகளை இயக்க வேண்டியுள்ளது.

5 கிலோ, 10 கிலோ பைக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மின் தட்டுப்பாடு காலங்களில் ஜெனரேட்டர் இயக்கும் டீசல் விலை உயர்வு, பணியாளர்கள் கூலி உயர்வு, வாகன செலவு உயர்வு போன்ற காரணங்களால் அரிசி உற்பத்தி செலவும் அதிகரித்துவிட்டது.

நெல் தட்டுப்பாடு காரணமாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பாலும், கடனுக்கான தவணைத் தொகை கட்ட முடியாமலும், தென்காசி மாவட்டத்தில் 20 முதல் 25 சதவீத நவீன அரிசி ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அரிசி உற்பத்தியை நிலைப்படுத்த ஆலைகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உற்பத்தி குறைந்து, விலை உயர்வை தடுக்க முடியாத நிலை ஏற்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply