“ஜென்ஸீக்களின் புரிதல்…” – ‘அஞ்சாதே 2’ குறித்து மிஷ்கின் பதில்

Priya
2 Views
2 Min Read

‘அஞ்சாதே’ படத்தை ஜென்ஸீ தலைமுறையினர் எப்படி புரிந்துகொள்வார்கள் என தெரியவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சத்தியவான் சாவித்திரி’ என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கின், தனது படங்களின் இரண்டாம் பாகம் குறித்து பேசினார்.

அவர் கூறும்போது, “துப்பறிவாளன்’ 2, 3, 4 மற்றும் 5 பண்ண வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. எனக்கும் விஷாலுக்கும் பிரச்சினை வந்ததால் நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். நான் அந்தப் படங்களை எடுக்கப்போவதில்லை.

‘ட்ரெயின்’ படத்தில் அதே கதாபாத்திரங்களை வைத்து ‘ட்ரெயின் 2’ என தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அதை எப்படி அணுகுவது என்று எனக்கு இன்னும் புரியவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து 2008-ல் வெளியான அவரின் அதிரடி த்ரில்லர் படமான ‘அஞ்சாதே’ குறித்து பேசிய மிஷ்கின், “அஞ்சாதே ஒரு வித்தியாசமான படம். இந்தப் படம் என் இளமை காலக்கட்டத்தில் உருவாக்கியது. இன்றைய 2026 ஜென்ஸீ தலைமுறை அந்தப் படத்தை எவ்வாறு புரிந்து கொள்வார்கள், அந்த உலகத்துடன் எப்படி தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ‘அஞ்சாதே’ வெற்றி பெற்றது என்பதற்காக ‘அஞ்சாதே 2’ வெற்றி பெற வேண்டுமா என்ன?

இன்று பல படங்களுக்கு இரண்டாம் பாகங்கள் வருகிறது. அவற்றில் ஒரு சின்ன பொய் இருப்பதாக நான் பார்க்கிறேன். முந்தையப் படத்தின் வெற்றியை வைத்து இரண்டாம் பாகத்தை ஓட்டிவிடலாம் எனப் பார்க்கிறார்கள். அதை நான் செய்ய விரும்பவில்லை.

நான் நேர்மையாக ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். கதையை எழுதி முடித்த பிறகு அது அஞ்சாதே படத்தின் அடுத்தக்கட்டம் போல இருந்தால் அதற்கு ‘அஞ்சாதே 2’ என பெயர் வைப்பேன். இல்லை என்றால் வேறு தலைப்பிட்டு விடுவேன்” என மிஷ்கின் தெரிவித்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ட்ரெயின் படம் டிசம்பர் 4 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிகுமார், சம்பத் ராஜ், கலையரசன், அஜய் ரத்னம், வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply