வாரணாசியில் நடைபெறவுள்ள காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு, மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் கடந்த நவம்பர் 2022-ல் காசி தமிழ்ச் சங்கமம் முதன்முறையாக தொடங்கப்பட்டது. வருடந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். முதல் 2 சங்கமங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆனால், அதில் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அடுத்தடுத்து வந்த இரண்டு சங்கமங்களுக்கு் அழைப்பு விடுத்தும் பலன் இல்லை.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு கடந்த 11-ம் தேதி கடிதம் எழுதி உள்ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு கிடைத்த அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு சார்பில் ‘காசி தமிழ் சங்கமம் 5-வது பதிப்பு (கேடிஎஸ் 5.0) வாராணசியில் 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது. காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வரும் நாகரிகத் தொடர்புகளைக் கொண்டாடுவதும், அவற்றை வலுப்படுத்துவதுமே காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய நோக்கம்.
இது, இரு பிராந்தியங்களுக்கு இடையிலான கலாச்சாரப் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. இளைஞர்கள் தங்கள் பொதுவான பாரம்பரியத்தை அனுபவிக்க வழிவகை செய்வது, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் உணர்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை https://kashitamil.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். வரும் நவம்பர் 28-ம் தேதி நடைபெறவுள்ள கேடிஎஸ் 5.0 தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

