மன்னார்குடி அருகே பாமணி ஆற்றில் தண்ணீர் வராததால் கருகி வரும் சம்பா பயிர்களை கண்டு வேதனையடைந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வயலில் இறங்கி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எளவனூர் பகுதியில் பாமணி ஆற்றுப் பாசனத்தை நம்பி 5,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தண்ணீரின்றி 3,000 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கருகிவரும் பயிர்களைக் கண்டு வேதனை அடைந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், நேற்று எளவனூரில் உள்ள தங்களது வயல்களில் இறங்கி ஒப்பாரி பாடல்களைப்பாடி கும்மியடித்து தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி கலைவாணி கூறியது: செப்.1-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போதே 45 நாட்களுக்குத்தான் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடியை தொடங்கினோம். ஆனால், மேட்டூரில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை முழுமையாக வரவில்லை.
கர்நாடகாவிடம் இருந்து உரிய தண்ணீரை பெற்றுத்தராமல் அரசு ஏமாற்றிவிட்டது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாததால் குறுவையைத் தொடர்ந்து சம்பா சாகுபடியும் பொய்த்துவிட்டது. வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால், பெண்கள் ஒப்பாரிவைத்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே நிலைதான் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, மன்னார்குடி அருகே அரிச்சத்திரா ஆற்றில் தண்ணீர் வராததால் காரியமங்கலத்தில் சம்பா பயிர்கள் கருகியுள்ளன. இதையடுத்து, அங்கு வயலில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மத்தியக் குழுவை வரவழைத்து பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மன்னார்குடி அருகே எளவனூரில் பாமணி ஆற்றில் தண்ணீர் வராததால் தண்ணீரின்றி கருகிப்போன சம்பா சாகுபடி வயலில் நேற்று ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

