தாராபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகிறார். இதில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்.6-ம் தேதி நடக்கிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இன்று தாராபுரத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தாராபுரம் – உடுமலை சாலையில் அமைந்துள்ள மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவிலான மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு மேடை மற்றும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
காவல்துறை கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின்படி, இந்த பொதுக்கூட்டத்தில் 10,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு சுமார் 7,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கூட்டத்துக்கான மின்வசதி, குடிநீர், மருத்துவக் குழுக்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
போக்குவரத்து மாற்றம்: முதல்வர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதால், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் தாராபுரம் வரலாம்.
அதன்படி, ஒட்டன்சத்திரம் வழியாக வரும் கனரக வாகனங்கள் உடுமலை-பொள்ளாச்சி வழியாகவும், கரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் பழநி-பொள்ளாச்சி வழியாகவும் செல்லலாம். திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

