“முதல்வர் மருந்தகங்களில் உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு” – தினகரன் குற்றச்சாட்டு

Priya
15 Views
1 Min Read

“முதல்வர் மருந்தகங்களில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

உயிர் காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்படவில்லை, உரிய கொள்முதல் ஆணைகள் வழங்கப்படவில்லை, தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என முதல்வர் மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கும் பல்வேறு காரணங்களால், மருந்துகளை வாங்க வரும் பொதுமக்களும் நோயாளிகளும் கடந்த சில மாதங்களாக ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டால், தனியார் மருந்தகங்களில் கூடுதல் விலை கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் போதிய அளவில் மருந்துகள் இருப்பில் இல்லாததால் விற்பனை பாதிப்பு, வருவாய் இழப்பு என முதல்வர் மருந்தக உரிமையாளர்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் அவசரமான சூழலில்கூட, அதனைச் சரி செய்வதற்கு முன்னுரிமை அளிக்காமல் டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் கவனம் செலுத்துவது தவெக அரசின் நிர்வாக அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் நோயாளிகளுக்குத் தேவையான உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதையும், போதிய அளவில் இருப்பு வைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தினகரன் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply