“விடுபட்ட வாக்காளர்களுக்கு ‘படிவம் 6’ வாய்ப்பை மறைத்தது ஏன்?” – ப.சிதம்பரம் கேள்வி

Priya
818 Views
1 Min Read

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியின்போது வாக்காளர்கள் நீக்கப்பட்ட நடைமுறை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நிதிச் செலவுகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது விடுபட்ட வாக்காளர்கள் ‘படிவம் 6’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக மறுபதிவு செய்ய முடியும் என்றால், மேற்கு வங்கத்தின் எஸ்ஐஆர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது இந்த விஷயம் ஏன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை?

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. மேல்முறையீடுகளை விசாரிக்கத் தீர்ப்பாயங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; அதன்படி லட்சக்கணக்கான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதிகள் ஆறு மாத காலம் கடுமையாக உழைத்து, சுமார் 1,26,000 மேல்முறையீடுகள் மீதான நடவடிக்கைகளை முடித்தனர். இதில் 91 முதல் 93 சதவீத மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன. இவையெல்லாம் வீணான முயற்சியா?

‘படிவம் 6’-ஐ சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக மறுபதிவு செய்ய முடியும் என்றால், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நேரத்தையும் பணத்தையும் வீணடித்த செயலாகவே தோன்றுகிறது.

13.30 கோடி பெயர்களை நீக்குவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது; இப்போது விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply