சைபர் மோசடிகளைத் தடுக்க இந்தியாவில் ஏஐ பாதுகாப்பு நிறுவனம் தேவையான ஒன்று என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கும் வகையில் சந்தனு பால் மற்றும் சம்பாமூர்த்தி இணைந்து எழுதிய “கேஷ்லெஸ் நேஷன்” என்ற நூல் பெங்களூரில் நடைபெற்ற சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார்.
இந்நூலின் அறிமுக விழா சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரங்கராஜன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, என்.சி.பி.ஐ முன்னாள் தலைவர் பாலசந்திரன் மற்றும் மும்பை பங்கு சந்தை மேலாண் இயக்குனர் சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில் “யுபிஐ தொழில்நுட்பத்தின் செயல்முறை மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையானதாகவும் உள்ளது. கரோனா காலங்களில் இந்தியா தன்னிடம் இருந்த தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு நன்கொடையாக எப்படி வழங்கியதோ, அதேபோன்று தனது யுபிஐ தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகளுக்கு பகிர்ந்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரங்கராஜன் பேசுகையில், “தன்னிச்சையான ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இணைந்ததன் விளைவாகவே யுபிஐ உருவானது. இன்றைய தினம் உலகமே வியந்து பார்க்கும் ஒரு தொழில்நுட்பமாக யுபிஐ மாறியுள்ளது.
2025-26-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.346 லட்சம் கோடி. அதில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.314 லட்சம் கோடி என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்” என்றார்.
முன்னதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் பேசுகையில் “நாட்டின் நிதிச்சூழலில் ஆர்.பி.ஐ எவ்வாறு முக்கிய பங்காற்றியது என்பதையும், காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் இந்த புத்தகம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. யுபிஐ வருவதற்கு முன்பு நிதி உள்ளடக்கம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சைபர் மோசடிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. யுபிஐ-களை சிலர் மோசடிகளுக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, இந்தியாவுக்கு உண்மையில் ஏஐ பாதுகாப்பு நிறுவனம் (AI Safety Institute) கட்டாயம் தேவை” என்றார்.

