இரண்டு முறை கர்நாடக மாநில அரசின் விருதுபெற்ற தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள திரைப்படம், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’.
2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற ஜூன் 25ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய இயக்குநர் தயாள் பத்மநாபன், “இது என் 22வது திரைப்படமும், மூன்றாவது தமிழ்ப்படமும் ஆகும். இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம். அவை வெளியீட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்படும்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், 1972-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்தகாலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது.

கன்னடத் துறையில் பணியாற்றியதால் என் தமிழ் பேசும் திறன் சற்று குறைந்துவிட்டது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சிறப்பாக வடிவமைத்த கவிதா பாரதி சாருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
என் நடிகர்கள் அனைவரும் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் நான் கொடுத்த அழுத்தத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்.
பிரிகிடாவுக்கு இப்படத்தில் அழகான கதாபாத்திரம் உள்ளது. வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே இருவருக்கும் கதையில் சமமான முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக சரவணன் சார், இந்தப் படத்தின் மீது கொண்ட அன்பினால் தனது சம்பளத்தைக் குறைத்ததோடு, கிளைமாக்ஸ் காட்சிக்காக கூடுதலாக ஒரு நாள் படப்பிடிப்பையும் வழங்கினார்.
படப்பிடிப்பு முடிந்த நாளில், திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே வேலை முடிந்ததால், ரங்கராஜ் பாண்டே தனது சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தார். இந்த முழு பயணத்திலும் குழுவின் ஆதரவு அளவிட முடியாதது. அவர்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்றார்.

