இதயம் முரளி – சினிமா விமர்சனம்

Priya
974 Views
2 Min Read

அதர்வா நடிப்பில், இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பள்ளிப் பருவ காதல், கல்லூரி வாழ்க்கை, நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை ஒன்றாக கலந்து சொல்லும் வண்ணமயமான காதல் படமாக உருவாகியுள்ளது.

திருச்சியில் பள்ளியில் படிக்கும் அதர்வா, ப்ரீத்தி முகுந்தனை பார்த்தவுடனே காதலிக்கிறார். டியூஷன், டென்னிஸ் மைதானம் என அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து சுற்றும் அதர்வா, எப்படியாவது தனது காதலை சொல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறார். ப்ரீத்தியின் பிறந்தநாள் விழாவில் காதலை வெளிப்படுத்த முடிவு செய்கிறார். ஆனால் அப்போது ப்ரீத்திக்கு ட்வின்ஸ் என்பது தெரியவருகிறது. இதனால்தான் இதுவரை யாரை காதலித்தோம் என்ற குழப்பத்தில் சிக்கிய அதர்வா, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுகிறார்.

அதன்பிறகு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் கயாடு லோகரை சந்திக்கும் அதர்வாவுக்கு, மீண்டும் காதல் மலர்கிறது. அவருடன் நெருக்கமாக பழகினாலும், இந்த முறையும் தனது காதலை சொல்லத் தயங்குகிறார். படிப்பு முடிந்து கயாடு சொந்த ஊருக்குச் சென்ற பிறகும், மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தாமல் தவிக்கிறார்.

இந்நிலையில், அதர்வாவுக்கு அவரது தாய்மாமன் நட்டி நட்ராஜ் பெரிய குடும்பத்தில் திருமணம் பேசுகிறார். திருமணத்திற்கு முன் தன் மனதில் பல ஆண்டுகளாக புதைத்து வைத்திருக்கும் காதலை ஒருமுறையாவது சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார் அதர்வா. இறுதியில் அவர் தனது காதலை யாரிடம் வெளிப்படுத்துகிறார்? யார் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அமெரிக்கா செல்லும் காரணம் என்ன? பகத் பாசிலின் கதாபாத்திரம் என்ன? என்பதற்கான பதில்களை நகைச்சுவை கலந்த திரைக்கதை மூலம் படம் சொல்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அதர்வாவின் இயல்பான நடிப்பு. பள்ளி மாணவனாகவும், கல்லூரி இளைஞனாகவும் இரண்டு பருவங்களிலும் வித்தியாசத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்கிறது. சில இடங்களில் அவரது நடிப்பு மறைந்த நடிகர் முரளியின் காதல் படங்களை நினைவுபடுத்துகிறது.

ப்ரீத்தி முகுந்தன் அழகு, நடிப்பு மற்றும் நடனத்தில் கவனம் ஈர்க்கிறார். காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். குறைந்த நேரமே வந்தாலும் கயாடு லோகர் மனதில் பதியும் நடிப்பை கொடுத்துள்ளார். நட்டி நட்ராஜ், சின்னி ஜெயந்த், ‘பரிதாபங்கள்’ சுதாகர், ரக்சன், தமன், நிஹாரிகா, ஜொனிதா காந்தி உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பகத் பாசிலின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும், அவரை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை கொடுக்கிறது. தமனின் இசையில் ‘இதயா’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் பல இடங்களில் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

இருப்பினும், தேவையில்லாத சண்டைக் காட்சிகள், சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் மற்றும் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் ஏற்பட்ட சிறிய தொய்வு ஆகியவை படத்தின் பலவீனங்களாக தெரிகின்றன.

மொத்தத்தில், காதல், நகைச்சுவை, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளை அழகாக கலந்து, இளைய தலைமுறையினரையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த படம், சில குறைகள் இருந்தாலும் மனதிற்கு இதமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply