ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் வகையில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை ‘போங்கு’ என்ற படத்தை இயக்கிய தாஜ் இயக்குகிறார். தமிழ்வாணன் தயாரித்து முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
இதில் அபிராமி, சிஎஸ்கே சரவணன், பிக்பாஸ் பிரவீன், ‘ஜெய்பீம்’ மொசக்குட்டி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கின்றனர். தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜோன்ஸ் ரூபட் இசை அமைக்கிறார்.
“இப்படத்தின் கதை, 2010 காலகட்டத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் இருந்தாலும் தற்போதைய காலகட்டத்துக்கும் பொருந்தும் வகையில் உருவாகிறது.
இம்மக்களுக்குப் படிப்பு, விளையாட்டில் திறமை இருந்தும் இவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் அடையாளம் அதிகாரவர்க்கத்தால் எவ்வாறு தடைபடுகிறது? அதை மீறி அவர்கள் அதில் சாதித்த பின்னரும் அவர்களின் வாழ்வாதாரம் எந்தளவு மாற்றம் கண்டுள்ளது என்பது பற்றிப் பேசுகிற படம் இது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

