தமிழகத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய செயல் திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
தமிழகத்தில் பெண்கள் நலன்களை முன்னிறுத்தி மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500, மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தவெக வழங்கியிருந்தது. தற்போது அவற்றை படிப்படியாக நிறைவேற்ற தவெக அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன்படி, பெண்களுக்கு மாநில அளவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக ‘மகளிருக்கான தரமான வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற செயல்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. சிறப்புத்திட்ட செயலாக்க துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, மாநிலம் முழுவதும் பெண்களின் வேலைவாய்ப்பு நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம், மாவட்டவாரியான வேலைவாய்ப்புகள், எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும், பெண்கள் வேலைக்கு செல்வதில் நிலவும் சவால்கள் மற்றும் தீர்வுகள், குழந்தை பராமரிப்பில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து அடுத்த 6 வாரங்களுக்குள் செயல்திட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

