பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 – திங்கட்கிழமை) கூடிய அவையின் தொடக்க நிகழ்வாக, கடந்த வாரம் காலமான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.
3 சிலிண்டர்கள் இலவசம்
“கடந்த 4 மாதங்களாக வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் செலவு கூடியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், மக்கள் நலனை பாதுக்காகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்கான செலவழிக்கப்படும் தொகையினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். இந்தத் திட்டம் பொங்கல் திருநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். எரிவாயு சிலிண்டருக்கு விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்” என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம்
“ஏகனாபுரம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள கிராம மக்களின் போராட்டத்தை அறிந்து கடந்த 20.01.2025-ல் அங்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். அப்போது சில அறிவிப்புகளை நான் வெளியிட்டேன். அது பின்வருமாறு: சென்னை பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய உள்ள விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024-ல் நடைபெற்ற மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு குறித்து நான் நன்கு அறிவேன். அதற்கான எனது முழு ஆதரவு உண்டு. ஆனால், பரந்தூரில் இந்த விமான நிலைய திட்டம் அமைய கூடாது.
அது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அறிவித்தேன். குறைவான விவாசாய நிலையங்கள் பாதிக்கப்படும் வகையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தேன்.
மக்களிடம் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
மாற்று இடம் தேர்வு செய்யப்படும்
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்
சென்னை – மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டர்மினல் 5’ ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல தற்போது நடைபெறும் ‘டர்மினல் 3’ கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.

