கடந்த 2012-ம் ஆண்டு யூடியூப் உலகை ஆட்சி செய்த பாடல் தான் ‘கங்னம் ஸ்டைல்’. தென் கொரிய பாப் பாடகரான சை (PSY) பாடி ஆடிய இந்தப் பாடல் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது.
பாடலில், ‘சை’ ஆடிய பிரபலமான குதிரை சவாரி நடன அசைவு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அவரைப் போலவே நடனமாடி டான்ஸ் வீடியோக்களை உருவாக்கினர்.
பாடல் வெளியான அடுத்த ஆண்டிலேயே 120 கோடி (1.2 பில்லியன்) பார்வைகளைப் பெற்றிருந்தது. யூடியூபில் 100 கோடி பார்வைகளைப் பெற்ற முதல் வீடியோ என்ற சாதனையையும் இந்தப் பாடல்தான் முதலில் படைத்தது. அப்போது அந்தப் பாடல் மூலம் ரூ.80 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்பாடல், 14 ஆண்டுகளுக்குப் பிறகு யூடியூபில் 600 கோடி பார்வைகளைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இதனால் இப்பாடலுக்குக் கிடைத்திருக்கும் வருமானம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. விளம்பரங்கள் மூலம் மட்டும் காப்புரிமை உரிமையாளர்களுக்குப் பல கோடி டாலர்கள் வருமானம் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

