சினிமா படப்பிடிப்பின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்!

Priya
753 Views
2 Min Read

சினிமா படப்பிடிப்பின்போது வாக்குறுதி அளித்தபடி, கொடைக்கானல் தாண்டிக்குடி அருகேயுள்ள அரசன் கொடை மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க முதல்வர் விஜய் ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல் கீழ்மலைக் கிராம மான தாண்டிக்குடியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அரசன் கோடை கிராமம். இக்கிராமத்தில் 250-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கரடு முரடான மலைப்பாதை, வனப்பகுதி வழியாக நடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

இந்த கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால் வாடகை ஜீப் மூலம் தாண்டிக்குடி வரையும், அங்கிருந்து பேருந்து மூலம் வெளி இடங்களுக்குச் சென்று வருகின்றனர். எனவே, தார் சாலை அமைக்க வேண்டும் என இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த திமுக ஆட்சியில் இந்த கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கவிருந்த நிலையில் ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். அதன் பின்பு சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க முதல்வர் விஜய் ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது: கடந்த ஆண்டு மே மாதம் தற்போதைய முதல்வரும், நடிகருமான விஜய், அரசன் கோடை கிராமத்தில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த கிராமத்தில் இருந்து ஒரு மணி நேரம் முதல்வர் நடந்து வந்தார். அங்கு சொந்த செலவில் சாலை அமைக்கலாமா என முதல்வர் கேட்டார். பேனர் வைப்பதற்கே அனுமதியில்லை. எப்படி சாலை அமைக்க அப்போதைய தமிழக அரசு அனுமதி தரும்? என்று கூறினேன்.

ஆட்சிக்கு வந்ததும் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்த 5-வது நாளில், அந்த கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ரூ.5 கோடியை ஒதுக்கி சாலைப் பணிகளைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்.

இதுகுறித்து அரசன்கொடை கிராமத்தினர் கூறுகையில், இங்கு படப்பிடிப்புக்கு வந்தபோது, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதாக முதல்வர் விஜய் உறுதியளித்தார். அதன்படி, தற்போது சாலை அமைக்க நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் சாலையை அமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர்.

இதனிடையே, கடந்த ஆண்டு படப்பிடிப்பின்போது அரசன்கொடை கிராமத்திலிருந்து முதல்வர் விஜய் நடந்து சென்றது, மக்களை சந்தித்து பேசியதை வீடியோவாக இணைத்து தவெகவினர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தும், சமூக வலைதளங்களில் பதி விட்டும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply