கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலவர் டி.கே.சிவக்குமார், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ‘கர்நாடகத்தில் வனத் துறையினரால் 3 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கு மத்திய அரசின் உதவியைக் கோருவதற்காக தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டத்திற்குட்பட்ட காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில், ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சாக்யா பகுதி வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்தப் பகுதியில் உள்ள டோமரா பாளையம், மரியமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த அந்தோணிசாமி (50) , ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (36) கொல்லப்பட்டனர்.
அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் வந்ததாகவும், அவர்களை வனத்துறையினர் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாகவும் வனத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனால், இது அப்பட்டமான பொய்.
உண்மையில், வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவருக்கும், மான் வேட்டைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் மூவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 100 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி அணை கட்டுவதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது, வாழ்வாதாரத்தை இழந்து பிழைப்பு தேடி கர்நாடகத்திற்கு சென்றவர்கள்.
அவர்களில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோர் கூலித் தொழிலாளிகள். மூன்றாவது நபரான குமார் கடந்த 17 ஆண்டுகளாக கேரளத்தில் ஒட்டுனராக பணியாற்றி வந்தவர். சொந்த வீட்டை சீரமைத்து வண்ணம் பூசும் பணிகளை மேற்கொள்வதற்காக சில நாள்களுக்கு முன்பு தான் மரியமங்கலம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஏழ்மை நிலையில் இருந்த அவர்கள் கூலி வேலை செய்வது, கால்நடைகளை வளர்ப்பது ஆகியவற்றையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
ஆகஸ்ட் 14-ம் தேதி பகலில் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் சென்ற அவர்களின் மாடுகள் வீடுகளுக்கு திரும்பாத நிலையில், அவற்றைத் தேடியே கொல்லப்பட்ட மூவர் உள்ளிட்ட நால்வர் காட்டுக்குள் சென்றுள்ளனர். மாடுகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இரவில் வனப்பகுதியில் தங்கியிருந்த போது தான் சாக்யா வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் 8 பேர் அங்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வனத்துறையினரின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் உடல் முழுவதும் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்து விட்டனர். அவர்களுடன் சென்ற இன்னொருவர் வனத்துறையினரிடம் சிக்காமல் தப்பி வந்து இந்த விவரத்தை உறவினர்களிடம் தெரிவித்த பிறகு தான் உண்மை தெரிய வந்திருக்கிறது.
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உள்பட மொத்தம் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பொது மக்கள், காவல்துறையினர், வனத்துறையினர், பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை பாமக குழுவினர் நேரில் சந்தித்து தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹானூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது காவல்துறை மற்றும் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் தவிர மீதமுள்ள அனைவரும் வனத்துறையினரின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தமிழர்கள் மூவரையும் வனத்துறையினர் திட்டமிட்டு படுகொலை செய்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொல்லப்பட்ட 3 தமிழர்களும் அப்பாவிகள். அவர்களை திட்டமிட்டு படுகொலை செய்து விட்டு, உண்மயை மறைக்க கர்நாடக வனத்துறை முயல்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு மிக அருகில் ஹானூர் வட்ட அரசு மருத்துவமனையும், சாம்ராஜ் நகரில் மாவட்ட அரசு மருத்துவமனையும் உள்ளன. கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை அந்த மருத்துவமனைகளுக்குத் தான் வனத்துறையினர் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், சற்றும் சம்பந்தமில்லாமல் அங்கிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள மைசூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ ஆய்வு செய்தது பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மைசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அறிந்து அங்கு சென்ற அவர்களின் உறவினர்கள், ‘‘எந்த குற்றமும் செய்யாத தமிழர்களை எதற்காக சுட்டுக் கொலை செய்தீர்கள்?’’ என வினா எழுப்பிய போது, அவர்களில் 6 பேரை காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஹானூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத் தலையிட்ட பிறகு தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கிகள், செருப்புகள், பைகள், மான் இறைச்சி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு ஜோடி செருப்பு புத்தம் புதியதாகும். அதில் எந்த வகையான அழுக்கும், கறையும் இல்லை. வனத்தில் ஒருவர் மான் வேட்டையாடியிருந்தால், அவரது செருப்பு புத்தம் புதிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட மூவருடன் இருந்த ஒருவர் தப்பித்து வந்ததால் தான் இந்த உண்மை முழுவதும் வெளியில் வந்துள்ளது. இல்லாவிட்டால், கொல்லப்பட்ட மூவரின் உடல்களையும் வனத்துறை மறைத்து எந்த சம்பவமும் நடக்காதது போல காட்டியிருக்கும். கடந்த காலங்களில் இதே போல் பலரை வனத்துறை சுட்டுக்கொலை செய்து தடயங்களை அழித்து விட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழுவிடம் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும்.
3 தமிழர்கள் படுகொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால், இந்த விசாரணை முடிவதற்கு முன்பாகவே இது குறித்து கர்நாடக சட்டமேலவையில் அறிக்கை தாக்கல் செய்த அம்மாநில வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, வனத்துறையினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று நற்சான்றிதழ் அளித்துள்ளார். இத்தகைய சூழலில் கர்நாடக அரசால் நடத்தப்படும் விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராது என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, கர்நாடக வனத் துறையினரால் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட 3 தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

