“தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தற்போது ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை” என்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் இன்று வெளியிட்டார்.
பின்னர், இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மின்கட்டணம் உயர்த்தப்படும்போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகிறது. செலவினங்கள் அதிகரிக்கிறதே தவிர கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை. புதிய பணியாளர் தேர்வும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், 2021-2026 வரை மின்வாரிய செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும், மின்வாரிய வருமானம் ரூ.4.97 லட்சம் கோடியாகவும் உள்ளது. தற்போது மின் வாரியத்தின் பற்றாக்குறை ரூ.34,447 கோடியாக உள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக 1,40,635 மின் ஊழியர்களின் தேவை இருக்கிறது. தற்போது 74,174 ஊழியர்கள் தான் பணியில் இருக்கிறார்கள்.
அதோடு, மின் துறையில் 65,921 காலிப் பணியிடங்கள் உள்ளன. 16,782 பேர் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். இதை சரி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு புதிதாக 20,449 பேர் நியமிக்கப்படுவார்கள். ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், மக்களுக்கு சிக்கல் இல்லாமல் சேவை செய்கிறோம்.
திமுக ஆட்சிக்காலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கி எந்த ஒரு திட்டமும் துவங்கப்படவில்லை.
மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது 4,47,603 ட்ரான்ஸ்பார்மர்கள் உள்ளன. 1,910 துணை மின் நிலையங்கள் உள்ளன. புதிதாக 231 துணை மின்நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன.
மின்துறைக்கு மொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது. மின்வாரிய வரலாற்றிலேயே கடந்த ஆட்சிக்காலத்தில் தான் அதிக வருவாய் ஈட்டப்பட்டு, அதேநேரம் அதிக செலவிடல் நடந்திருக்கிறது.
அதேநேரம் 2021-2026 ஆம் ஆண்டில், மின்வாரியத்தின் கடன் ரூ.87.399 கோடி ஆகும். இவ்வளவு வரவு இருந்து, செலவும் செய்து, கடனும் வாங்கி உள்கட்டமைப்புகள் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை.
2021 முதல் உப்பூர் அனல்மின் நிலையம் திட்டம் தொடர்ந்து கிடப்பில் கிடக்கிறது. ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் துறை செயல்பாடுகள் இனி வெளிப்படை தன்மையுடன் இருக்கும். மின்வாரியத்தை மீட்டெடுக்க வேண்டும். தற்போது கடன் வாங்காமல் நிலைமையை சமாளிக்க முடியாது.
இந்த ஆண்டு மின்கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை. அனைத்து நுகர்வோர்களுக்கும் மின் கட்டணம் உயர்வு இல்லை. தமிழகத்தின் மின்சேமிப்பு திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக 50 ஆண்டுகளாக விஞ்ஞான ஊழல் செய்தனர். அதையும் கண்டுபிடிப்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வெள்ளை அறிக்கையின் சாராம்சம் என்னவென்றால் கடந்த காலங்களில் மக்களும் கஷ்டத்தில் இருந்தார்கள், தொழில் துறையும் கஷ்டத்தில் தான் இருந்தது, மின் துறையும் கஷ்டத்தில் இருந்தது. யார் பலனடைந்தார்கள் எனத் தெரியவில்லை. அதைத்தான் எல்லா பக்கமும் தேடிக் கொண்டிருக்கிறோம். எல்லாமே செலவினமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் செய்த செலவுக்கு ஏற்ப எந்த கட்டமைப்பும் மேம்படுத்தப்படவில்லை.
டிரான்ஸ்ஃபார்மர் மட்டுமல்லாமல் மின் கண்டெக்டர் கொள்முதலிலும் முறைகேடு நடந்துள்ளது. 9 இடங்களில் மின் கண்டெக்டர் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சியமையவில்லை என்றால் மின்வாரியம் தனியார்மயமாகியிருக்கும். மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டிய பணிகளில் ஈடுபடுவோம்.” என்றார்.

