தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலத்தடி நீரை கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்பு கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது.
வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளிடம் ரூ.1,250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
இவர்களுக்கு முன்பாக கடந்த 2023-ம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர்.
விதிமீறல் வேளாண் இலவச மின்சாரத்திற்கான இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்திருக்கும் மின்சார வாரியம் மின் இணைப்பை வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும்.
தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களிலிருந்து 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.
விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களிடம் ரூ.1,500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக்கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 விவசாயிகளுக்கு உடனடியாக வேளாண் இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

