அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், வடமாநிலத் தொழிலாளி கொலை (வேளச்சேரி), பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக் கொலை (ஓமலூர்), தனியாக வசித்த மூதாட்டி, நகைகளுக்காக வெட்டிக் கொலை (கிச்சிப்பாளையம் – சேலம்) திருட்டு பைக் விற்றுவந்த பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கொலை (திருத்தணி), சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை (திண்டுக்கல்), நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு வெளியே வந்தவர் பட்டப் பகலில் படுகொலை (திருநெல்வேலி), ரயில் நிலையத்தில் மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் (எண்ணூர்) என்ற செய்திகளே தினமும் கண்ணில் படுகின்றன.
நேற்றுகூட சென்னை, திருவொற்றியூரில் 6 வயது வடமாநில சிறுமியை இளைஞர்கள் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. வீட்டுக்கு வீடு விஜய் இருக்கிறார், அண்ணனாக பாதுகாப்பு கொடுப்பேன் என்று டயலாக் பேசுவது மட்டும் போதாது. நிஜமாகவே நல்லாட்சி கொடுப்பதற்கு திறன் இருக்க வேண்டும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பி தவெக-வுக்கு வாக்களித்த மக்கள் தற்போது ரத்த ஆறு ஓடுவதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். மனிதர்களை அலட்சியமாக நடுரோட்டில் வெட்டி வீசி, சாலைகளில் ரத்த ஆறு ஓடும் அவலமும் தவெக ஆட்சியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கையில் தமிழகக் காவல் துறையை முனைப்புடன் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

