சென்னை மெட்ரோ திட்டத்தில் திமுக அரசின் இடத்தை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ திட்டம் கருணாநிதி ஆட்சியில், நான் துணை முதல்வராக இருந்தபோது ஜப்பான் நாட்டின் நிதியைப் பெற்றுத் தொடங்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் சுணக்கம் கண்ட இரண்டாம் கட்டப் பணிகளை, 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும் விரைவுபடுத்தினோம். மத்திய அரசின் பங்களிப்பு நிதி 3 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையிலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையே மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ரூ.11,762 கோடியும், வெளிநாட்டு கடனுதவி மூலம் ரூ.6,802 கோடி என மொத்தம் ரூ.18,564 கோடியைச் செலவிட்டுப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டோம்.
2024 அக்டோபரில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசின் நிதி ஒப்புதல் பெறப்பட்டது. இவ்வழித்தடத்தை 2025 இறுதியிலேயே திறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். ஆனால், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தாலும், அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாலும், திட்டமிட்டபடி திறந்து வைக்க முடியாமல் போனது. ஆண்டுக் கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன்.
1976-ல் கருணாநிதி உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தைத் திறக்கும் முன் திமுக அரசு கலைக்கப்பட்டாலும், அதன் வரலாற்றை எவராலும் மறைக்க முடியவில்லையோ, அதேபோல சென்னை மெட்ரோ திட்டத்திலும் திமுக அரசின் இடத்தை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

