அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்தியை நியமனம் செய்தது ஏன்? – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Priya
579 Views
1 Min Read

இந்து சமய அறநிலையத்துறை மாநில அறங்காவலர் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை நியமனம் செய்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் ரமேஷ், செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மாநில அறங்காவலர் குழுவை பொறுத்தவரை, ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் ஈட்டும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் இக்குழுவின் பங்குமிக முக்கியமானது.

ஆன்மிக ரீதியாக வழிகாட்டுதல்களை வழங்க மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் தலைவராகவும், சட்ட ரீதியான ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமனம் குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்து கேட்கிறீர்கள். அர்ச்சனா கல்பாத்தியை இந்த உலகுக்கு ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும். ஆனால், அவர் தனது சொந்தப் பணத்தில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.

அவரது மாமனார் சீனிவாசன், பெரிய தனியார் குழுமத்தின் மூலம் பல நூறு கோடி ரூபாய் செலவில் கோயில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கோயில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டும் இத்தகைய குடும்பங்களை அங்கீகரிப்பது, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவோருக்கு பெரிய ஊக்கமாக அமையும்.

அமைச்சர் உதயநிதிக்கு நடிகர், தயாரிப்பாளர் என்ற முகங்கள் இருப்பதுபோல, இப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முகமும் உள்ளது. அதேபோல், அர்ச்சனா கல்பாத்திக்கு திரைத்துறையை தாண்டி ஆன்மிகத் திருப்பணி செய்யும் மற்றொரு முகமும் இருக்கிறது.

சுமதி சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். பாடகர் வேல்முருகன், கோயில்களில் ஆன்மிகப் பாடல்களைப் பாடுபவர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சம்பத், ஏற்கெனவே அறநிலையத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால், நிர்வாக ரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவார். எனவே,அனைத்து விதிகளையும் பின்பற்றியே இந்த சிறப்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply