தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையே தவெக அரசு இதை, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்தது. அதனுடன் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த 22-ம் தேதி விரிவாக்கம் செய்தார்.
இதன்மூலம் தற்போது தமிழகம் முழுவதுமுள்ள 44,984 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 34.64 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப் படுகிறது.
இந்நிலையில் திருவள்ளூர், கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை உணவு சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் பள்ளிகளில் காலை உணவை ஆசிரியர்கள் முதலில் சாப்பிட்டு தரம் பார்த்த பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சமையலறையில் சமையல் செய்யும் பொருட்கள் தவிர பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
சமையலறை புகை, தூசி, இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்களை பயன்படுத்து வதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்யவேண்டும்.
சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர், அந்த உணவு அவர்களின் உடல்நலத்துக்கு உகந்த தரமான உணவுதான் என்பதை ஆசிரியர்கள் சாப்பிட்டு உறுதி செய்த பின்னரே மாணவர் களுக்கு வழங்க வேண்டும்.
சமையல் செய்த பின்னர் பரிமாறுவதற்கு பயன்படுத்தப் படும் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும் போது மட்டும் திறந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னர் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் இதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

