தமிழகத்தில் திமுக, பாஜக, அதிமுக இடையே ரகசியமான கூட்டணி உள்ளதாகவும் மக்களால் அமைந்த இந்த ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்றும் மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கேள்வி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக உள்பட 5 முனைப்போட்டி நிலவுகிறது. அந்தவகையில் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆத்தூா் சுங்கச்சாவடி அருகே முதல்வா் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். முன்னதாக திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்திய அவர், அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது: நாட்டில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக மற்றும் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் பேசுகிறார்கள். ஊழல் என்றால் ஆதாரத்தைக் காட்ட சொல்கிறார்கள். காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் என்கிறார்கள்.
ஸ்டாலின் சார் பாவம், அவர் தோற்று போய் இருக்கிறார். அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்கள். ஸ்டாலின் சார் தோற்றாலும் ஜெயித்தாலும் எனக்கு அங்கிள்தான். ஸ்வீட் அங்கிள்.
மேலும், முதல்வரானதும் மெட்ரோவை ஆய்வு செய்ய பாலத்துக்குச் சென்றால், நான் கட்டிய பாலத்தில் நீங்கள் ஏன் ஆய்வு செய்கிறீர்கள் என்கிறார். இந்த பாலத்தை என்ன அவர் சொந்தப் பணத்திலா கட்டினார். அவர் ரூ.10 ஆயிரம் மட்டும் தான் வைத்திருக்கிறாராம்.
மக்கள் காசை நாங்கள் தொட மாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம். அதனால் தான் சட்டப்பேரவையில் அந்த காலத்தில் திமுக செய்த ஊழல்களை எல்லாம் சொன்னோம். ஊழலின் ஊற்றுக்கண் யார் என்பதை இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. தமிழகத்தில் திமுக, பாஜக, அதிமுக இடையே ரகசிய கூட்டணி உள்ளது. டெல்லியில் இருக்கும் திமுக பெயர் பாஜக, தமிழகத்தில் பாஜக பெயர் திமுக. மக்களால் அமைந்த இந்த ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.
சிறுமிகளை ஒருவர் பல ஆண்டுகளாக சீரழித்து வந்துள்ளார். திமுக ஆட்சியில் புகார் கொடுத்தும், அதை மூடி மறைத்துவிட்டார்கள். அப்படி என்ன டீலிங் எனத் தெரியவில்லை. ஸ்டாலின் சார் வாயைத் திறங்கள். இந்த விவகாரத்தில் திமுக – அதிமுக வாய் திறக்கவில்லை. பெண்கள் பாதுகாப்புக்கென்றே பிறந்த மாதிரி பேசுகிறார்கள். குழந்தைகளை சீரழித்த நபரை பற்றி பேசக் கூட முடியாத நீங்கள் எல்லாம் என்ன அரசியல்வாதிகள்.
Advertisement
கடந்த 34 ஆண்டுகளாக எல்லா விஷயத்தையும் பார்த்துவிட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். திமுக ஊழல் செய்ததில்லை, அல்லது செய்ய மாட்டோம் என்று உங்களால் சொல்ல முடியுமா. அரசியலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பின்பும் உங்கள் சொத்துக் கணக்கு எவ்வளவு என்று சொல்ல முடியுமா.
ஆபாச பேச்சு
திமுகவுக்கு நம் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை. அந்த விரக்தியில், எனது அம்மாவை தப்பாக பேசினார்கள். அதைக்கூடபொறுத்துக் கொண்டேன். ஆனால், அன்பு காட்டுகிற தமிழக பெண்களை ஆபாசமாக பேசுகிறார்கள். திமுக தலைமையும் இந்த மாதிரிதான் பேசுகிறது. மேலும் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த அரசின் கடமையாகும். இவ்வாறு பேசினார்.
முதல்வர் தந்த வாக்குறுதிகள்
மதுராந்தகம் தொகுதிக்கு செய்யவுள்ள திட்டங்கள் குறித்துமுதல்வர் அளித்த வாக்குறுதிகள்: செங்கல்பட்டு மாவட்டத்தில் வாடகைக் கட்டிடத்தில்இயங்கி வரும் சமூகநீதி மாணவர்கள் விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்டிதரப்படும், உணவு தானியங்களை சேமிக்க சேமிப்புக் கிடங்கும் அமைக்கப்படும், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தாய் சேய் நலக்கட்டிடம், புதிய உயரடுக்கு வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும். மதுராந்தகம் ஏரியின் 5-வது பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக ரூ.10 கோடி செலவில் செயல்படுத்தப்படும். (இவை அனைத்தும் பட்ஜெட் கூட்டதொடரில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதிட்டங்களாகும்)

