முதல்வர் விஜய் வெறும் சினிமா வசனங்களை மட்டுமே பேசுகிறார் என்றும், பாஜகவும் திமுகவும் என்றுமே எதிரி கட்சிகள்தான் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் ஒரு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் 576 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசமும், 300 தூய்மை பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாலவாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூர் சம்பவம் நடைபெற்று ஓராண்டு ஆகிறது. இதில் யாரெல்லாம் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். திமுகவும், பாஜகவும் வேறு வேறில்லை என முதல்வர் சொல்கிறார். பாஜகவுக்கும், திமுகவுக்கும் கொள்கை அளவில் எந்தவித உடன்பாடும் இருந்தது இல்லை.
1999-ல் மட்டும் ஒரு முறை உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு இன்று வரை பாஜகவும், திமுகவும் எதிர்கட்சிகள் மட்டும் அல்ல, எதிரி கட்சிகளாக தான் இருந்து கொண்டிருக்கிறோம்.
முதல்வர் விஜய்க்கு என்ன பேச வேண்டும் என்பதே தெரியவில்லை. சினிமா சூட்டிங் வசனத்தை சட்டப்பேரவையிலும் பேசுகிறார், பிரச்சாரத்திலும் பேசுகிறார். தமிழகத்தில் நாள்தோறும் கொலை, பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

