“இரண்டரை மாதமாக ஜெம் வீரமணியை கைது செய்யாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி காப்பாற்றியது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. அமைச்சர் ஆவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பெரிய துரோகம் இது?
ஒட்டுப்போட்ட மக்களையும் மதிக்கவில்லை. வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் மதிக்கவில்லை. அப்படிப்பட்ட துரோகியை வேட்பாளராக தவெக நிறுத்தி இருக்கிறது. வாக்களித்த மக்களை மதிக்காமல் கட்சி மாறி போட்டியிடும் வேட்பாளரை மக்கள் தோற்கடிக்க வேண்டும். மரகதம் குமரவேலை வைத்துக்கொண்டு விஜய் தூயவாதம் பேசுகிறார்.
பொதுத் தேர்தலின்போது விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை பெற்றது தவெக.
ஜெம் வீரமணியை தான் தான் கைது செய்ய உத்தரவிட்டதாக முதல்வர் விஜய் கூறியது பச்சைப் பொய். இரண்டரை மாதமாக ஜெம் வீரமணியை கைது செய்யாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி காப்பாற்றியது. ஜெம் வீரமணி நடத்திய நிகழ்ச்சியில் தவெக அரசின் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஜெம் வீரமணி தனது குடும்ப நண்பர் என்று தவெக அமைச்சர் ஒருவரே கூறுகிறார். சிறுமிகளை சீரழித்தவர்களுக்கு முதல்வர் விஜய் என்ன தண்டனை பெற்றுத் தரப் போகிறார்?
மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினால் முதல்வரிடம் இருந்து பதில் வராது; எழுந்து சென்று விடுவார்.
சட்டப்பேரவையே சினிமா போன்று ஆகிவிட்டது. சட்டமன்றம் இப்போது பட்டிமன்றம் ஆக மாறிவிட்டது அவையில் 7 மணி நேரம் வெட்டி பேச்சுதான் நடந்தது. இந்தியாவில் எங்குமே இல்லாத மோசமான அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது. அரசு கடன் வாங்கினால் அது மக்கள் தலையில்தான் சுமையாக வந்து விழும்” என்று அவர் பேசினார்.

