“விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல திட்டங்களை வகுக்கிறோம்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Priya
5 Views
1 Min Read

“கல்வித் துறைக்கு இணையாக விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்து வருகிறோம்” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இதே விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கிப் பயின்றவன் நான். இங்கு உள்ள உள்கட்டமைப்புகள், விடுதிகளை ஆய்வு செய்து, விடுதிகளில் பயிலும் மாணவர்கள், பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துள்ளோம்.

கடந்த 1994-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பெரிய அளவில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளும் இல்லை. எனவே, உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்கள் விடுபட முடியும். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறையும். இதை கருத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு இணையாக விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்து வருகிறோம்.

நமது விளையாட்டு வீரர்கள் அதிகபட்சம் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவே இலக்கு வைத்துள்ளனர். ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. வெளிநாடுகளைப் போல, தமிழகத்திலும் சிறு வயதில் இருந்தே விளையாட்டு வீரர்களை தயார் செய்து, ஊக்குவிக்க உள்ளோம். குறிப்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து 8 வயது முதலே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply