ரஜினி 51 – கொண்டாடி மகிழ்ந்த ‘தர்மன்’ படக்குழு!

Priya
1527 Views
2 Min Read

ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் 51 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், அதை ‘தர்மன்’ படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை தற்போது நடித்து வரும் ‘தர்மன்’ படப்பிடிப்பில், இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

அந்தக் கொண்டாட்டம் குறித்த சிறிய வீடியோ க்ளிப் ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘ 51 ஆண்டுகள், ஒரு பெயர், ஒரு சூப்பர் ஸ்டார். ‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்’ என்று தெரிவித்து ரஜினி கேக் வெட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

திரைப்படத்தில் நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்த ரஜினிகாந்த் நண்பரின் உதவியுடன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்பு, கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக ரஜினி நடித்திருந்தார்.

தொடக்கத்தில் துணைக் கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரஜினி, பின்பு நாயகனாக மாறி, 1990-களில் வணிக ரீதியிலான வெற்றிகாரமான கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இன்று இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக அவர் விளங்குகிறார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. இந்தப் படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார். படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. படத்தில் இருந்து அவர் விலகிய நிலையில், சிபி சக்கரவர்த்தி படத்தினை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அவரும் விலகிக் கொண்ட நிலையில், தற்போது அஸ்வத் மாரிமுத்து படத்தை இயக்கி வருகிறார்.

சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply