“போதைப்பொருள் விவகாரத்தை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு” – ஸ்டாலின் கண்டனம்

Priya
11 Views
2 Min Read

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், தவெகவினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.

ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்த சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதல்வர் விஜய் இனியும் ‘திமுக, திமுக’ என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? – சட்டவிரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்தததாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகில் சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ.2.32 கோடி மற்றும் ரூ.3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டுக்கு டிஎஸ்பி பொன்ராம் தலைமையில் போலீஸார் சென்றனர், மூர்த்தியிடம் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கான கடிதத்தை வழங்கிவிட்டு தொடர்ந்து சோதனை நடத்தினர்.

சட்டவிரோதமாக செம்மண், கற்களை வெட்டி எடுத்த குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் பாலமேடு பகுதியில் பி.மூர்த்தி கிரஷர் ஜல்லி தொழிற்சாலை நடத்துவதால், அதற்கு சட்டவிரோதமாக கற்கள் கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply