முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
மக்கள் சேவை தளம்
இந்நிலையில், பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்எல்ஏ-வான முதல்வரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் ‘மக்கள் சேவை தளம்’ என்ற பிரத்யேக செல்போன் செயலியை முதல்வர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.
இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான, மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப்பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவி, வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியிலான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.
பொதுமக்கள் இந்தச் செயலி மூலம் புகாரைப்பதிவு செய்த அடுத்த சில நொடிகளிலேயே, அது பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான ‘டிக்கெட் எண்’ புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
ஒவ்வொரு புகாரும் முன்னுரிமை அடிப்படையிலும், தீர்க்கப்பட வேண்டிய காலக்கெடுவோடும் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் தங்களின் டிக்கெட் எண்ணை செயலியில் உள்ளீடு செய்து, புகாரின் தற்போதைய நிலையை ஆரம்பம் முதல் தீர்வு வரை நேரடியாகக் கண்காணிக்கலாம்.
இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் துப்புரவு போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அதுகுறித்த விரிவான பதில் மக்களுக்கு செயலி வழியாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், இச்செயலியைப் பிரத்யேகமாகக் கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செல்போன் செயலி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
முதல்வரின் இந்த அதிநவீன ‘டிஜிட்டல்’ மக்கள் சேவைத் திட்டம் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் எனவும், பெரம்பூர் தொகுதி மக்களின் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்து அனைத்து சட்டப்பேரவை தொகுதியிலும் இந்த செயலி விரிவுபடுத்தப்படும் எனவும் தவெகவினர் தெரிவித்தனர்

