“மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மீதான கொடூரத் தாக்குதல். இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஆபத்தான விளையாட்டை மோடி அரசு கைவிட வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மதம், மொழியை வைத்து இந்திய மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையை நோக்கியே, கடந்த 12 ஆண்டுகளாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கும் கல்வித்துறையில் அதிகாரம் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். ஆனாலும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், அவர்களின் கடுமையான எதிர்ப்புகளை ஒரு பொருட்டாக மதிக்காமல், சர்வாதிகார மனப்பான்மையுடன் தேசிய கல்விக் கொள்கையை மோடி அரசு இறுதி செய்தது. அதன்படி, இந்த (2026-2027) கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6ம் வகுப்பிலிருந்து மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 9ம் வகுப்பு மாணவர்களும் மும்மொழியை படிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் 6ம் வகுப்பில் இருந்து மும்மொழி என பின்வாங்கியிருக்கிறார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் மீதான இந்த துல்லிய, கொடூரத் தாக்குல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பயிற்று மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது. இதுவரை மூன்று மொழிகளை கற்பித்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு. ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்பித்தனர். இது உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெற உதவியது. ஆனால், இப்போது மூன்றாவது மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், இந்தி அல்லது சமஸ்கிருதம் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த இரு மொழிகளுக்குத் தான் ஆசிரியர்கள் உள்ளனர்.
இது மாணவர்கள், பெற்றோர்களிடம் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பயிற்று மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழியாக இந்தி உள்ளது. மோடி அரசு வந்த பிறகு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியாக பள்ளி அமைந்துள்ள மாநிலத்தின் மொழியை வைக்க கூட பாசிச மோடி அரசுக்கு மனமில்லை. எவ்வளவு பெரிய அக்கிரமம் இது?.
மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடியது என்பது உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களின் கருத்து. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையாலும், பெரும் அழுத்தத்தை தராத மாநிலப் பாடத் திட்டத்தாலும்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வித் துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. கல்வியில் மட்டுமல்லாது, சமூக, பொருளாதார ரீதியாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததற்கு இரு மொழிக் கொள்கையே காரணம்.
ஆனால், தங்களது குறுகிய அரசியல் காரணங்களுக்காக, இந்தி, சமஸ்கிருதத்தை இந்தியாவின் மொழியாக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் ஆபத்தான விளையாட்டை மோடி அரசு துவங்கியிருக்கிறது. இதைவிட மோசமான, அறுவெறுக்கத்தக்க, பாசிச செயல்பாடு எதுவும் இருக்க முடியாது.

