எம்ஆர்எஃப், கோத்தாரி குழுமத்தினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு

Priya
7 Views
1 Min Read

தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்த எம்ஆர்எஃப் மற்றும் கோத்தாரி குழுமத்தினர், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், முதலீடுகள் குறித்து விளக்கினர்.

தமிழக முதல்வராக மே.10-ம் தேதி விஜய் பொறுப்பேற்ற நிலையில், அவரை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் சந்தித்து தொடர் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

முதல்வரும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் சந்தித்து முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். சமீபத்தில் அப்போலோ குழுமத்தின் நிர்வாகிகள் சந்தித்தனர்.

தொடர்ந்து, தமிழ்நாடு சிறு குறுதொழில்கள் சங்கத்தினர், தென்னிந்திய ஆலைகள் சங்கம், பருத்தி துணிநூல் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, இந்திய துணிநூல் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து துறையின் உற்பத்தி வளர்ச்சி, மின்கட்டண சலுகை குறித்து விவாதித்தனர்.

தொடர்ந்து, இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம், ரானே மெட்ராஸ் நிறுவனம். நடேசன் சின்குரோ கோன்ஸ் நிறுவனம், அல்பா ரப்பர் நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யை எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கே.எம்.மம்மன், துணைத்தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அருண் மம்மன், மேலாண் இயக்குநர் ராகுல் மம்மன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது தமிழகத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் செயல்பாடுகள், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்து விவாதித்தனர். சந்திப்பின் போது முதல்வருக்கு எம்ஆர்எஃப் கிரிக்கெட் மட்டை ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினர்.

இதுதவிர, கோத்தாரி இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜெ.ரபீக் அகமதுவும் முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கோத்தாரி நிறுன ஆலோசகர் ஜெயந்த் முரளியும் உடன் இருந்தார். அப்போது, தமிழகத்தில் கோத்தாரி நிறுவனம் மேற்கொண்டு வரும் முதலீடுகள் குறித்தும், காலணி உற்பத்தித்துறையில் அந்நிறுவனம் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்தும் முதல்வரிடம் ரபீக் அகமது விளக்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply