மாநகராட்சி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேற்று திறந்துவைத்தார்.
மயிலாப்பூர் தொகுதி, 126-வது வார்டு, 4-வது ட்ரஸ்ட் லிங்க் தெருவில் ரூ.80 லட்சத்தில் புதிதாக நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் பங்கேற்று உடற்பயிற்சிக் கூடத்தை திறந்துவைத்தார். இது மேயர் மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.50 லட்சம், 126-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் செலவில் 750 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு ட்ரெட் மில், சைக்கிளிங், மல்டி ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மந்தைவெளிப்பாக்கம், கடற்கரையோர குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் பயனடைவர்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், மாமன்ற உறுப்பினர் அமிர்தா வர்ஷினி உள்ளிட்டோர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.

