72 ஆண்டுகளுக்குப் பிறகு கால் இறுதி சுற்றில் கால்பதித்தது சுவிட்சர்லாந்து | FIFA WC 2026

Priya
5 Views
3 Min Read

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று கனடாவின் வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து – கொலம்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணியின் கை ஓங்கியிருந்தது. 21-வது நிமிடத்தில் கொலம்பியாவின் குஸ்டாவோ புவேர்ட்டா அடித்த லாங்-ரேஞ்ச் ஷாட்டை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் அற்புதமாக தடுத்தார்.

30-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஃபேபியன் ரீடர் கோல் போஸ்ட்டை நோக்கி வலுவாக அடித்த ஷாட்டை கொலம்பிய கோல்கீப்பர் கமிலோ வார்காஸ் தடுத்தார். அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே டான் என்டோயின் கோல் அடிக்கும் முயற்சியையும் தகர்த்தார் கமிலோ வார்காஸ். இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.

52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு பாக்ஸிற்கு சற்று வெளியே ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் அந்த அணியின் வீரர் ஃபேபியன் ரீடர் கொலம்பிய தடுப்புச் சுவரை ஏமாற்றி கர்லிங் ஷாட் வாயிலாக கோல் போஸ்ட்டிற்குள் பந்தை திணிக்க முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர், அடித்த ஷாட் கோல் வலைக்கு வெளியே பக்கவாட்டில் இருந்த வலையில் விழுந்தது.

மறுபுறம் கொலம்பியாவின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ், சுவிட்சர்லாந்து டிஃபென்டர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவிலும் ஆட்டம் 0-0 என சமநிலையிலேயே இருந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. கொலம்பியா வீரர் ஜான் லுகுமி தலையால் முட்டிய பந்து கோல் போஸ்ட்டின் மேல் பாரில் பட்டு விலகிச் சென்றது.

120 நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாமல் போனதால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் கொலம்பியா அணியின் முதல் வாய்ப்பில் ஜுவான் பெர்னாண்டோ குயின்டெரோ கோல் அடித்தார். சுவிட்சர்லாந்து அணி தரப்பில் கிரானிட் ஷகா தனது வாய்ப்பை கோலாக மாற்றினார்.

2-வது வாய்ப்பில் கொலம்பியாவின் அணியின் அனுபவமிக்க டிஃபென்டரான டேவின்சன் சான்செஸ் அடித்த ஷாட், துரதிர்ஷ்டவசமாக கோல் போஸ்ட்டின் மேல் பாரில் பட்டு வெளியேறியது. இது கொலம்பியா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணியின் ஜெகி அம்டோனி கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து 3-வது வாய்ப்பில் கொலம்பியாவின் ஜாமின்டன் காம்பாஸ் கோல் அடித்தார். ஆனால் சுவிட்சர்லாந்து அணித்தரப்பில் மானுவல் அகஞ்சி அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே உயரமாக சென்றது. இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. 4-வது வாய்ப்பில் கொலம்பியா அணியின் குச்சோ ஹெர்னாண்டஸ் அடித்த ஷாட்டை சுவிட்சர்லாந்து அணியின் கோல் கீப்பர் கிரகோர் கோபெல் சாதுரியமாக பாய்ந்து கோல் விழவிடாமல் தடுத்தார்.

மறுபுறம் சுவிட்சர்லாந்து அணியில் செட்ரிக் இட்டன் தனது வாய்ப்பை கோலாக மாற்றினார். கடைசி வாய்ப்பில் கொலம்பியா அணியின் லூயிஸ் டயஸ் கோல் அடித்தார். மறுபுறம் ரூபன் வர்காஸ் தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்ற சுவிட்சர்லாந்து அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் சுவிட்சர்லாந்து அணி 1954-ம் ஆண்டுக்கு பிறகு பிறகு முதல் முறையாக கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. வரும் 12-ம் தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply