ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வாட்ஸ்-ஆப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று `நலம்AI’ என்ற பெயரில் வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை மற்றும் `மை ஹாஸ்பிடல் செயலி’ சேவையை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்துவமனை டீன் சாந்தாராமன் உடனிருந்தனர். அப்போது அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆதார் கட்டாயமில்லை
நலம்AI வாட்ஸ்-ஆப் சாட்பாட் சேவை மூலமாக வீட்டில் இருந்தபடியே புறநோயாளிகள் பிரிவு சேவைக்கு ஓபி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
9619222999 என்ற எண்ணுக்கு hi என்று பதிவிட்டு, அதில் கேட்கும் விவரங்களுக்கு பதில் அளித்தால் முன்பதிவு செய்யப்படும். இந்த சேவைக்கு ஆதார் எண்கட்டாயமில்லை. மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை வாட்ஸ்-ஆப் மூலமாகவும் பெறலாம். இந்த சேவை 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்றால், அங்கு ஒட்டப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை செல்போனில் ஸ்கேன் செய்து மை ஹாஸ்பிடல் செயலியில் புகார் அளிக்கலாம். உடனடியாக கழிப்பறை சுத்தம் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

