தென் மாவட்ட பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்ப தற்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையான வசதியையும் எளிதான அணுகலையும் வழங்கவில்லை என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது.
தற்போது, சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல பயணிகள் தனியார் வாகனங்கள், கூடுதல் அரசு மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் நேர விரயமும் போக்குவரத்து நெரிசலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில், மின்சார ரயில் இணைப்புகள் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படாததால், மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் உள்ளன.
சென்னையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பயணிகள் எளிதாக கோயம்பேடு வந்தடைந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய முடியும். சென்னை நகருக்குள் தினசரி பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால் வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் சுமார் 3,000 மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே வெளியூர் பேருந்துகள்தான் சென்னை போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.
எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் அரசுப் பேருந்துகள் மற்றும் தென் மாவட்ட சேவைகளை மீண்டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, பயணிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

