தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானிய கோரிக்கையின் போது மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
புற்றுநோய் சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று சிகிச்சைகள், உயர்தர பரிசோதனைகள் உள்பட காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் 70 வயது நிரம்பிய 38 லட்சம் முதியவர்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி அரசு காப்பீட்டின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அத்திட்டத்தில் இடம்பெறாத முதியவர்களும், இத்திட்டத்தில் இணைக்கப்படுவர்கள்.
பயனாளிகள் சேர்க்கை, இ-சேவை மையங்கள் மூலமாகவும், அரசு காப்பீடு பதிவு செய்வதற்கான பிற மையங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும். புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.849 என்ற வீதத்தில் காப்பீட்டு தவணை தொகை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு புதிய காப்பீட்டு நிறுவனத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் போது பிரீமியம் தொகையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது முதல்வர் காப்பீட்டில் உள்ள அனைத்து மருத்துவ சேவைகளும் முதியோர் காப்பீட்டு திட்டத்திலும் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, நிதித்துறையின் ஒப்புதலுடன் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. பயனாளிகளை சேர்ப்பதற்கு முன்பு அவர்களது சுய விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் காப்பீடு, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களில் உள்ள பயனாளிக்கு இரட்டை பலன் கிடைக்காதவாறு இதனை செயல்படுத்துவது முக்கியம். இந்த விஷயங்களை திட்ட இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

