என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘செங்கோல்’

Priya
698 Views
2 Min Read

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘செங்கோல்’ குறித்த வரலாற்றுச் செய்தி இடம்பெற்றுள்ளது.

புதிய கல்வி ஆண்டு தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்கிழமையன்று சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும் – பகுதி 2 ( Understanding Society India and Beyond-Part ) என்ற தலைப்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில், 2023-ல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்து பாரம்பரியத்துக்கு இணங்க, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆட்சி மற்றும் நல்லாட்சியின் கலாச்சார அடையாளமான செங்கோல் 2023-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட்டது. நீதி நிறைந்த ஆட்சியின் அடையாளமாக செங்கோலைப் பயன்படுத்தும் மரபு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது.

இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில், 1947 ஆகஸ்ட 15 அன்று நள்ளிரவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழ்நாட்டின் ஆதீனத் துறவிகளிடம் இருந்து செங்கோலைப் பெற்றார்’ என பாடப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலாச்சார அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஒரு காலத்தில் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் செங்கோல் முக்கிய பங்காற்றியது. இது வெறும் சடங்குக்கான ஒரு பொருள் மட்டுமல்ல. இது ஒரு ஆட்சியாளருக்கு வழங்கப்பட்ட அறம் சார்ந்த பொறுப்புகளின் ஆழமான சான்று.

இந்த புனிதமான மரபு 1947-ல் இந்தியாவின் சுதந்திரத்துக்கு முந்தைய தருணத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. அப்போது, ஜவஹர்லால் நேருவிடம் ஒரு செங்கோல் முறைப்படி வழங்கப்பட்டது.

வும்மிடி பங்காரு செட்டியால் உருவாக்கப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதீனகர்த்தர்களால் புனிதப்படுத்தப்பட்ட இந்த செங்கோல், காலனித்துவ ஆட்சியிலிருந்து இறையாண்மை கொண்ட இந்திய அரசுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட நிகழ்வை நாகரிக வேர்களைக் கொண்ட ஒரு நிகழ்வாக இது அடையாளப்படுத்தியது.

இது ஆன்மிக அடிப்படையிலான ஆசிகளையும், இந்தியாவின் புனிதமான மரபின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply