“பொங்கலுக்கு புதிய ரக சேலை வழங்கும் முடிவில் சரியான திட்டமிடல் இல்லை” – பாலபாரதி விமர்சனம்

Priya
692 Views
2 Min Read

“பொங்கல் பண்டிகைக்கு புதிய ரக சேலை வழங்கும் தமிழக அரசின் முடிவில் சரியான திட்டமிடல் இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி விமர்சித்துள்ளார்.

ராஜபாளையம் அருகே புனல்வேலியில் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களை மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினரான முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சந்தித்துப் பேசினார்.

அதன்பின் அவர் கூறியது: “புதிய அரசு வந்தவுடன் நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் விரும்பும் வகையில் புதிய ரக வேஷ்டி, சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான திட்டமிடல் சரியாக இல்லை.

விருதுநகர் மாவட்டத்தில் 3 மாதங்களாக நெசவாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பிரதானமான 4 கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். நமது மானம் காக்க ஆடை நெசவு செய்யும் நெசவாளர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுப்பது அவமானம் இல்லையா?

இந்த மாவட்டத்தில் இரு பெண் அமைச்சர்கள், பெண் மாவட்ட ஆட்சியர் இருந்தும், 80 சதவீதம் பெண்கள் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் என்ன சிக்கல் உள்ளது?

உடை என்பது மனித நாகரிகத்தின் அடையாளம். எம்.எல்.ஏ.க்களுக்கு உடனடியாக கார், ஓட்டுநருக்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்த இந்த அரசு, நெசவாளர்களுக்கு ஒரு சேலைக்கு ரூ.114 வழங்குவதுதான் அரசியல்.

உழைப்புச் சுரண்டலில் முதன்மையான மாவட்டமாக விருதுநகர் உள்ளது. இதுதான் தமிழகத்தின் சாபக்கேடு. இன்று உள்ள விலைவாசி உயர்வில் 114 ரூபாயை வைத்து குடும்பம் நடத்த முடியுமா? அடிப்படை கூலியை அரசே வழங்கவில்லை என்றால் தனியார் நிறுவனங்கள் எப்படி வழங்க முன்வரும்?

கோரிக்கை நிறைவேறும் வரை அமைச்சர் வீடு முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அறிவித்தால் என்ன?

டெல்லி மாணவர் போராட்டம், மேகமலை போராட்டம் போல் அனைத்து தரப்பினரையும் இணைத்து மிகப் பெரிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த வேண்டும். கோரிக்கை வென்றால் வீட்டுக்கு… இல்லையென்றால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை நோக்கி செல்வோம்.

ஒரு கிராம் தங்கத்தை எங்கோ வாங்கி கொடுத்து விடுகிறீர்கள். ஆனால், தமிழக நெசவாளர்கள் இல்லாமல் சேலை வழங்க முடியாது. அக்டோபர் 5 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்க உள்ளோம். இதில் கட்சி மற்றும் சமூக பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply