ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரை கடந்த 6 மாதங்களாக நியமிக்காதது ஏன்? என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், உச்சிமலை குப்பம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.பொன்னுசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வன்கொடுமைகளைத் தடுக்கவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதற்கான சட்டம் 2021-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.சிவகுமார் தலைவராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் எஸ்.தமிழ்வாணன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி காலமானார்.
அவர் மறைந்த பிறகு, கடந்த 6 மாதங்களாக ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள், உரிமைகள் பறிப்பு தொடர்பான புகார்களை விசாரித்தல், அரசுக்கு பரிந்துரைகளை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சட்ட அமலாக்கத்தை கண்காணித்தல் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பணிகளை ஊக்குவித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக பள்ளிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
இவற்றை கவனத்தில் கொண்டு ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைச் செயலருக்கு கடந்த ஜூலை 24-ம்தேதி மனு அனுப்பினேன்.
ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை ஆணையத்தின் தலைவராக உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

