அஜய் தேவ்கனின் ‘த்ரிஷ்யம் 3’ படத் தலைப்புடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Priya
763 Views
2 Min Read

அஜய் தேவ்கன் இந்தியில் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்துக்கு, ‘த்ரிஷ்யம்: தி கன்களூஷன்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படுள்ளது.

இது குறித்து படக்குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கண்ணோட்டம் உண்டு. என்னைப் பொறுத்தவரை என் குடும்பமே எனக்கு எல்லாம். ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது ’என தெரிவித்துள்ளது. அத்துடன் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில், அஜய் தேவ்கனின் ஒற்றைக் கண் அண்மையில் காட்டப்பட்டுள்ளது. அதன் மீது, ‘என்னுடைய நிஜம்… எனக்கு சரியானது எல்லாம்… என்னுடைய குடும்பம் மட்டும்தான்’ என்ற வார்த்தைகள் உள்ளன.

இந்த மூன்றாவது பாகத்திலும், விஜய்யாக அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக ஷ்ரியா சரணும், ஐஜி மீராவாக தபுவும் நடிக்க இருக்கிறார்கள். படத்தை அபிஷேக் பதாக் இயக்குகிறார்.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத் தொடரின் முதல் பாகம், மலையாளத்தில் 2013-ம் ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு இரண்டாவது பாகம் வெளியானது. படத்தின் மூன்றாவது பாகம் இந்த மே மாதம் திரைக்கு வந்தது. இந்த மூன்று பாகங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.

மலையாளப் படத்தை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் 2015-ம் வெளியானது. அதனை மறைந்த நிஷிகாந்த் காம்த் இயக்கி இருந்தார். இரண்டாவது பாகம், அபிஷேக் பதாக் இயக்கத்தில் 2022-ல் வெளியானது. முதல் இரண்டு பாகங்களும் மலையாளப் படத்தின் மறு ஆக்கமாக இருந்தன. மூன்றாவது பாகத்தின் கதை சற்று மாறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘த்ரிஷ்யம் 3’ மலையாளப் படத்தில் நான்காவது பாகம் வரலாம் என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தி படத்திலும் அந்த யுக்தி இருக்குமா என்று தெரியாத நிலையில், வெளியாகி இருக்கும் படத்தின் தலைப்பு இதுவே இறுதி பாகம் என உணர்த்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply