‘பட்டாசு தொழில் இழிவானதா?’ – சட்ட பதிவேடுகளின் வார்த்தைகளை மாற்ற உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Priya
677 Views
2 Min Read

தமிழக அரசின் தொழிலுக்கான வரையறை குறித்த ஆவணங்களிலும், படைக்கல (ஆயுத) சட்டத்திலும் பட்டாசு தொழிலை இழிவான மற்றும் அருவருக்கத்தக்க (derogatory) என குறிப்பிடப்பட்டு உள்ளதை மாற்றம் செய்து, மரியாதைக்குரிய வகையில் குறிப்பிட தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்று 1,080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் செயல்படும் நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன.

சிவகாசி பட்டாசு தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்துக்கும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதில் 70 சதவீதத்துக்கும் மேலானோர் பெண்கள். நாட்டின் மொத்த தேவையில் 95 சதவிகிதம் பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழக அரசு பதிவேடுகள் மற்றும் படைக்கல சட்டத்தில் பட்டாசு தொழில் அபாயகரமான சிவப்பு பிரிவில் உள்ளதால் பட்டாசு கடைகளுக்கு அனுமதி பெறுதல், ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல், விற்பனை ஆகியவற்றில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன.

மேலும் படைக்கல சட்டத்தில் பட்டாசு என்பது இழிவான மற்றும் அருவருக்கத்தக்கது என வரையறை செய்யப்பட்டுள்ளதால் பட்டாசு தொழில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பட்டாசு உற்பத்தியை சிறு, குறு, நடுத்தர என ஏதாவது ஒரு வகை தொழிலாக அங்கீகரித்து வெள்ளை பிரிவில் சேர்க்கவும், படைக்கல சட்டத்தில் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க என உள்ளதை மாற்றி அமைக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சுதந்திர போராட்ட காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் நாட்டு வெடிகளை பயன்படுத்தி ஆங்கிலேயே ஆட்சி எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டதால் படைக்கல சட்டத்தில் இழிவான மற்றும் அருவருக்கத்தக்கது எனக் குறிப்பிடப்பட்டது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசு தொழில் இழிவானது என குறிப்பிடப்பட்டுள்ளதால் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. படைக்கல சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply