மருத்துவக் கல்வி இயக்குநராக தகுதியான டீனை அரசு நியமிக்க வேண்டும்: அரசு மருத்துவர்கள்

Priya
603 Views
2 Min Read

கூட்டணிக் கட்சித் தலைவரின் சிபாரிசில் மருத்துவக் கல்வி இயக்குநர் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள், தகுதியான டீன்களில் ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (டிஎம்இ) இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததால், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலராக இருந்த லோகநாயகி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. பொதுவாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன் பொறுப்பில் இருப்பவர்களைத்தான் தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நியமிப்பது வழக்கம்.

இதற்கான தகுதி, சம்பந்தப்பட்டவர் ஓய்வுபெற குறைந்தது ஓராண்டு இருந்தால் போதுமானது. ஆனால், தற்போது நேர்முகத்தேர்வு என்ற பெயரில், ஓய்வுபெற்ற டீன் அந்தஸ்திலான ஒருவரை வைத்து, மருத்துவக் கல்வி இயக்குநரை தேர்வு செய்யும் முறைக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதால், தகுதியான டீன்கள் பாதிக்கப்படுவதாக அரசு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியதாவது: இதுவரை இல்லாத வகையில் வழக்கத்துக்கு மாறாக ஓய்வுபெற்ற டீன் அந்தஸ்திலான ஒருவர் மூலமாக மருத்துவக் கல்வி இயக்குநரைத் தேர்வு செய்வது முற்றிலும் தவறானது.

மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்திராத ஒருவர் எப்படி மருத்துவக் கல்வி இயக்குநரை தேர்வு செய்ய முடியும். விதிமுறைகளைத் திருத்தி, இந்த பதவிக்கு தகுதியான டீன்களை தேர்வு செய்யாமல், தவெக அரசின் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவரின் தலையீட்டின்படி, அவரது சிபாரிசில் ஒருவரைத் தேர்வு செய்வது கண்டிக்கத்தக்கது.

அரசின் இந்த அணுகுமுறையால் தகுதியான டீன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாகவந்துள்ள தவெக அரசு ஏமாற்றத்தை கொடுக்கக்கூடாது.

இந்த அரசு வெளிப்படைத்தன்மை யுடன் செயல்படும் என்று தொடர்ந்து முதல்வர் விஜய் தெரிவித்து வருகிறார். தவெக அரசு மீதும், முதல்வர் விஜய் மீதும் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதனால், இந்த விஷயத்தில் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தலையிட்டு, தகுதியான டீனை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply