‘மன்னிப்பு கேட்க முடியாது’ – ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலர் இ.பரந்தாமன் பதிலடி

Priya
13 Views
2 Min Read

“மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பொதுவில் இருக்கும் தகவலை தான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி உள்ளேன் ஆகவே மன்னிப்போ, நஷ்ட ஈடோ வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்,” என்று தனக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பிய நோட்டீஸுக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பதிலளித்துள்ளார்

கடந்த நவ.09 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் விமர்சித்துப் பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்

அதில், “கடந்த 09.11.2026 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகத் தாங்கள் தனிப்பட்ட முறையில் சுமத்திய குறிப்பிட்ட மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கான இழப்பீடாக ரூ. 1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) தொகையை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்குத் தாங்கள் இணங்கத் தவறினால், தகுந்த நிவாரணம் மற்றும் தீர்வுகளுக்காகத் தங்களுக்கு எதிராகத் தகுந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதையும், அதற்கான செலவுகள் மற்றும் விளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பாவீர்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த நோட்டீஸுக்கு எதிராக இ. பரந்தாமன் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோரக் கிராமத்தில், கடல் நடுவில் மாற்றுவதன் மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமார் 137 கிலோ படிக மெத்தபெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அது பற்றி சிறு துறைமுகங்கள் துறையின் பொறுப்பு அமைச்சராகவும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைவராகவும் இருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் அது பற்றி கேள்வி எழுப்பினால் மட்டும் அச்சுறுத்தி முடக்கும் வகையில் வழக்கறிஞர் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி மிரட்ட நினைக்கிறார்.

இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பொதுவில் இருக்கும் தகவலை தான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி உள்ளேன் ஆகவே மன்னிப்போ, நஷ்ட ஈடோ வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply