உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணனுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் நேற்று அனுப்பிய மனு: அரிசி இருப்பு கட்டுப்பாட்டு அரசாணையில், மொத்த அரிசி வியாபாரிகள் 2 ஆயிரம் டன் வரை இருப்பு வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால், சில்லறை வியாபாரிகள், பெரிய மளிகைக் கடைக்காரர்கள் அதிகபட்சம் 8 டன் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என நிர்ணயம் செய்திருப்பது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
ஒரு பெரிய மளிகைக் கடைக்காரர், தனது கடையில் ஏற்கெனவே 3 முதல் 5 டன் வரை அரிசி இருப்பு இருக்கும்போதே, அடுத்த கட்ட ஆர்டர் வழங்குவது வழக்கம்.
அரிசி ஆலைகள், மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து லாரிகள் மூலம் அனுப்பும்போது, ஒரு லாரி லோடு என்பது குறைந்தபட்சம் 10 டன் முதல் 20 டன் வரை அனுப்பப்படுகிறது.
ஏற்கெனவே கடையில் உள்ள 3 முதல் 5 டன் இருப்போடு, புதிதாக வரும் ஒரு லாரி லோடு அரிசியை இறக்கும்போது, மொத்த இருப்பு உடனடியாக 15 முதல் 25 டன்னாக உயர்ந்துவிடுகிறது.
அரசின் 8 டன் உச்ச வரம்பால், ஒரு லாரி லோடு சரக்கைக் கூட முழுமையாக இறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, 20 டன் வரை இருப்பு வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.

