பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் ராஜா; மகளிர் பிரிவில் ஞானேஷ்வரியும் வெள்ளி வென்று அசத்தல்

Priya
23 Views
5 Min Read

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவருக்​கான பளுதூக்​குதலில் 65 கிலோ எடைப் பிரி​வில் இந்​திய வீர​ரான ராஜா முத்துப்பாண்டி ஸ்னாட்ச் பிரி​வில் 126 கிலோ எடையை​யும், கிளீன் அன்ட் ஜெர்க்கில் 160 கிலோ எடை​யும் என ஒட்​டுமொத்​த​மாக 286 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்றார்.

ராஜா முத்துப்பாண்டி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். மலேசி​யா​வின் முகமது அஸ்​னில் பின் பிதின் 299 கிலோ எடையை தூக்கி தங்​கப் பதக்​க​மும், பப்புவா நியூ கினி​யா​வின் மோரியா பாரு 282 கிலோ எடையை தூக்கி வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர். வெள்​ளிப் பதக்​கம் வென்ற ராஜா முத்​து​பாண்டி கூறும்​போது, “நான் தங்​கப் பதக்​கம் வெல்​வதற்​காகவே இங்கு வந்​திருந்​தேன். ஆனால் திட்​ட​மிட்​டபடி எது​வும் அமைய​வில்​லை. என்ன நடந்​தது என்று என்​னால் சொல்ல முடிய​வில்​லை, ஆனால் எனக்கு மிக​வும் ஏமாற்​ற​மாக இருக்​கிறது” என்​றார்.

ஞானேஷ்வரி யாதவ்

மகளிருக்​கான பளுதூக்​குதலில் 53 கிலோ எடைப் பிரி​வில் இந்தியா​வின் ஞானேஷ்வரி யாதவ் ஸ்னாட்ச் பிரி​வில் 88 கிலோ எடை​யும், கிளீன் அன்ட் ஜெர்க்​கில் 111 கிலோ எடை​யும் என ஒட்டுமொத்​த​மாக 199 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். நைஜீரி​யா​வின் ஓனோமே ஓமோலோலா 206 கிலோ (93 கிலோ + 113 கிலோ) எடையைத் தூக்கி புதிய ​சாதனை படைத்​து தங்​கப்​ பதக்​கம்​ வென்​றார்​. ஞானேஷ்வரி யாதவ், சத்தீஸ்கரில் உள்ள போண்டியா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

நீளம் தாண்டுதல்

ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் எம்.ஸ்ரீசங்கர் 8.01 மீட்டர் நீளம் தாண்டி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 8 மீட்டருக்கு மேல் தாண்டும் வீரர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் அல்லது 12 சிறந்த வீரர்கள் இறுதிப் போட்டியில் நுழைய முடியும் என்பது விதியாகும். ‘ஏ’ பிரிவில் இருந்து 27 வயதாகும் ஸ்ரீசங்கர் மட்டுமே நேரடியாக தகுதி பெற்றார்.

குரூப் ‘பி’ தகுதி சுற்றில் மற்றொரு இந்திய வீரரான சத்யநாதன் 7.77 மீட்டர் நீளம் தாண்டி 4-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் ஜமைக்காவின் தாஜே கேல் 8.10 மீட்டர் நீளமும், உரோய் ரயான் 8.04 மீட்டர் நீளமும் தாண்டி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றனர். இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.

தடை தாண்டும் ஓட்டம்

ஆட​வருக்​கான 110 மீட்​டர் தடை​தாண்​டும் ஓட்​டம் தகுதி சுற்​றில் இந்​திய வீரர் தேஜஸ் ஷிர்சே 13.76 விநாடிகளில் இலக்கை எட்டி ஒட்​டுமொத்​த​மாக 6-வது இடம் பிடித்து இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றார். இதன் மூலம் காமன்​வெல்த் விளை​யாட்டு வரலாற்​றில் 110 மீட்​டர் தடை​தாண்​டும் ஓட்​டத்​தில் இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்ற முதல் இந்​திய வீரர் என்ற சாதனையை படைத்​தார் தேஜஸ் ஷிர்​சே.

குரிந்தர்வீர் சிங் ஏமாற்றம்

ஆட​வருக்​கான 100 மீட்​டர் ஓட்ட தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் குரிந்​தர்​வீர் சிங் பந்தய தூரத்தை 10.39 விநாடிகளில் கடந்து ஒட்டுமொத்​த​மாக 28-வது இடத்தை பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

இறுதிப் போட்டியில் சஜன் பிரகாஷ்

நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் 1:58.59 விநாடிகளில் இலக்கை அடைந்து ஒட்டுமொத்தமாக 6-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நீச்​சலில் 6-வது இடம்

நீச்​சலில் ஆடவருக்​கான 4×200 மீட்​டர் ஃப்​ரீஸ்​டைல் பிரி​வில் தக் ஷன் சசிகு​மார், அனீஷ் சுனில்​கு​மார் கவு​டா, ஆர்​யன் நெஹ்​ரா, ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி பந்தய தூரத்தை 7:29.84 விநாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்​தது. ஆஸ்​திரேலியா (7:01.47) தங்​கப் பதக்​க​மும், இங்​கிலாந்து (7:04.98) வெள்ளிப் பதக்கமும், வேல்ஸ் (7:09.59) வெண்​கலப் பதக்​க​மும் வென்​றன.

சமந்தா 7-வது இடம்

ஜிம்னாஸ்டிக்கில் மகளிருக்கான வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் புரோதிஷ்தா சமந்தா 12.883 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

தமிழ்​நாடு முதல்​வர் சி.ஜோசப் விஜய் தனது சமூக வலைத்தள பதி​வில்​, “ஸ்​காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரும் 23-வது காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில், ஆண்​களுக்​கான 65 கிலோ பளுதூக்​கும் எடைப் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று சாதனை படைத்​துள்ள தமிழ்​நாட்​டின் தூத்​துக்​குடி மாவட்​டத்​தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்​துப்​பாண்​டி-க்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள் மற்​றும் பாராட்​டு​கள்.‌ அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்​நாடு அரசின் சார்​பில் உயரிய ஊக்​கத்​தொகை​யாக ரூ.30 லட்​சம் வழங்​கப்​படும்​” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

கால் இறு​தி​யில் ஜது​மணி

ஆடவருக்​கான குத்​துச்​சண்​டை​யில் 55 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ஜது​மணி மன்​டெங்​பாம், பாகிஸ்​தானின் சுமாமா ரஹ்​மானுடன் மோதி​னார். இதில் ராணுவ வீர​ரான ஜது​மணி 5-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். மகளிருக்​கான 54 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்​தி​யா​வின் பிரீத்தி பவார், மலா​வி​யின் டெபோரா எம்​டெஞ்​சேவை எதிர்த்து விளை​யாடி​னார்.

இதில் பிரீத்தி பவார், ‘ரெப்ஃரீ ஸ்டாப் கான்​டெஸ்ட்’ வாயி​லாக வெற்றி பெற்​று கால் இறுதி சுற்றில் நுழைந்தார். டெபோரா எம்​டெஞ்​சே, இரண்டு முறை ‘ஸ்​டாண்​டிங் கவுண்ட்’ எச்​சரிக்​கைகளைப் பெற்​றார். இதனால் 2-வது ரவுண்​டில் 47 விநாடிகள் மீதமிருந்த நிலை​யில் நடு​வர் போட்​டியை நிறுத்​தி, பிரீத்தி வெற்றி பெற்​ற​தாக அறி​வித்​தார். கால் இறுதி சுற்​றில் ஜது​மணி​யும், பிரீத்​தி​யும் வெற்றி பெற்​றால் குறைந்த பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​வார்​கள்.

ஆடவருக்​கான 65 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ஆதித்யா பிர​தாப் 2-3 என்ற கணக்​கில் உகாண்​டா​வின் நுஹு பாட்​டே​விடம் தோல்வி அடைந்​தார். ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தின் வில்லியம் ஹெவிட்டை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சோனோ​வால் தோல்வி

லான் பவுல் விளை​யாட்​டில் மகளிர் அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் பிங்கி சிங், ரூபா ராணி திர்கே ஜோடி தங்​களது கடைசி குரூப் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த மோதல் 1-1 சமனில் முடிந்​தது. இதையடுத்து நடை​பெற்ற டை பிரேக்​கரில் இந்​திய ஜோடி தோல்வி அடைந்​த​தால் அரை இறு​திக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது.

ஆடவர் தனி​நபர் பிரி​வில் இந்​தி​யா​வின் புதுல் சோனோ​வால் தனது கடைசி குரூப் ஆட்​டத்​தில் 0.5-1.5 என்ற கணக்​கில் மால்டாவின் ஷான் ஜேம்​ஸ் பார்​னிஷிடம் தோல்வி அடைந்து அரை இறு​திக்​கு முன்​னேறும்​ வாய்ப்​பை இழந்​தார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply