நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் வென்றுள்ளார்.
33 வயதான அவர் கடந்த 2025-26 சீசனில் மொத்தமாக 77 கோல்களை தனது தேசிய மற்றும் கிளப் அணிக்காக பதிவு செய்திருந்தார். இதோடு சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 8 அசிஸ்ட்களை அவர் வழங்கினார். கிளப் அளவில் பேயர்ன் மூனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சீசனில் மட்டும் அவரது செயல்பாடு ஆடுகள மூலம் அபார கோல்களை பதிவு செய்து, உலகின் மிக ஆபத்தான ஸ்ட்ரைக்கர் என்ற பெயரை உறுதிப்படுத்தினார். கிளப் அணிக்காக புண்டல்ஸ்லிகா லீக், டிஎப்பி போகல் மற்றும் ஜெர்மன் சூப்பர் கோப்பை வென்ற பேயர்ன் மூனிச் அணியில் ஹாரி கேன் முக்கியம் அங்கம் வகித்தார். ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதையும் கடந்த சீசனில் வென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மூன்றாவது இடம் பிடித்தது. அந்த் தொடரில் 6 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ballon d’Or விருது
சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d’Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆகஸ்ட் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.
நடப்பு ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் ஜூட் பெல்லிங்கம், பால் குபேர்சி, குக்குரே, டெம்பெல்லே, எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட், ஹகிமி, லமின் யமால், மெஸ்ஸி, ஜோவா நெவெஸ், நுனோ மெண்டெஸ், ரைஸ், ரோட்ரி, வினிசியஸ் ஜூனியர், டோரஸ் உள்ளிட்ட பெயர்கள் ஹாரி கேன் உடன் இருந்தது.
25 ஆண்டு கால காத்திருப்பு
இங்கிலாந்து கால்பந்து வீரர் மைக்கேல் ஓவன் கடந்த 2001-ல் Ballon d’Or விருதை வென்றார். அதன் பின்னர் இங்கிலாந்து வீரர் எவராலும் அந்த விருதை வெல்ல முடியவில்லை.
இந்தச் சூழலில் தற்போது அந்த விருதை ஹாரி கேன் வென்றுள்ளார். இதன் மூலம் 25 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த விருதை பெற்றுள்ள ஐந்தாவது இங்கிலாந்து வீரர் ஆகியுள்ளார் ஹாரி கேன். இந்த விருதோடு இந்த ஆண்டுக்கான சிறந்த ஸ்ட்ரைக்கர் விருதையும் அவர் வென்றுள்ளார்.
“இந்த தருணம் மிகவும் சிறப்பானது. ஏனெனில், லண்டனில் நடைபெறும் இந்நிகழ்வில் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். கடந்த சீசன் எனது சிறந்த சீசனாக அமைந்தது” என்று ஹாரி கேன் தெரிவித்தார்.

