இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி

Priya
17 Views
2 Min Read

இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் ஆட்​டத்​தில் 34 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்​றுள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி அயர்​லாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாடி வருகிறது. இந்​தத் தொடரின் முதல் டி20 ஆட்​டம் பெல்பாஸ்ட்டிலுள்ள சிவில் சர்​வீஸ் கிரிக்​கெட் கிளப் மைதானத்தில் இந்​திய நேரப்​படி நேற்று மாலை 6 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய அயர்​லாந்து அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 182 ரன்​கள் குவித்​தது.

தொடக்க ஆட்​டக்​காரர்​கள் டிம் டெக்​டர் 17 ரன்​களும், ராஸ் அடாயிர் 12 ரன்​களும் எடுத்தனர். பெஞ்​சமின் காலிட்ஸ் அதிரடியாக ஆட முற்​பட்டு 11 பந்​துகளில் 15 ரன்​களில் வீழ்ந்தார். ஆனால் கேப்​ட​னும், விக்​கெட் கீப்​பரு​மான லோர்​கன் டக்​கரும், காரத் டெலானி​யும் இணைந்து அதிரடி​யாக விளை​யாடி அணியின் ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர்.

லோர்​கன் டக்​கர் 36 பந்​துகளில் 5 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 50 ரன்​கள் குவித்​து, ஹர்​ஷித் ராணா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். காரத் டெலானி 32 பந்​துகளில் தலா 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்​கள் சேர்த்த நிலை​யில் அர்​ஷ்தீப் சிங் பந்து​வீச்​சில் அவுட்​டா​னார்.

இந்​திய அணி தரப்​பில் ஹர்​ஷித் ராணா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். அர்​ஷ்தீப் சிங், அக்​சர் படேல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், ஷிவம் துபே ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர். இதைத் தொடர்ந்து 183 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்குடன் இந்​திய அணி பேட்​டிங் செய்​யத் தொடங்​கியது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக அபிஷேக் சர்​மா​வும், சஞ்சு சாம்சனும் களம்​பு​குந்​தனர். 2-வது ஓவரிலேயே சஞ்சு சாம்​சன் ஆட்ட​மிழந்து ரசிகர்​களை ஏமாற்​றி​னார். 4 பந்​துகளில் 5 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜெய் மூன்ட்ரா பந்​தில் அவர் போல்​டா​னார்.

இதையடுத்து களம்​பு​குந்த இஷான் கிஷன் ஒரு ரன்​னிலும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 3 ரன்​களி​லும் அவுட்​டா​யினர். ஆனால் மறு​முனை​யில் அபிஷேக் சர்​மா, வழக்​கம் போலவே அதிரடி​யாக விளை​யாடி சிக்​ஸர்​களை​யும், பவுண்​டரி​களை​யும் பறக்கவிட்டார்.

19 பந்​துகளில் அரை சதம் கடந்த அபிஷேக் சர்மா அதற்​கடுத்த பந்திலேயே ஆட்​ட​மிழந்​தார். 20 பந்​துகளில் 7 பவுண்​டரி​கள், 2 சிக்ஸர்​களு​டன் 50 ரன்​கள் குவித்த அவர் லியாம் மெக்​கார்த்தி பந்து​வீச்​சில் காலிட்​ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த திலக் வர்மா 21, வாஷிங்​டன் சுந்​தர் 9, ஷிவம் துபே 25, அக்​சர் படேல் 15, ஹர்​ஷித் ராணா 8, அர்ஷ்தீப் சிங் 2 ரன்​கள் சேர்த்து வீழ்ந்​தனர். 18.4 ஓவர்​களில் இந்திய அணி 148 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இதையடுத்து அயர்​லாந்து 34 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது. அயர்​லாந்து அணி சார்​பில் மேத்யூ ஹம்ப்​ரீஸ், மேத்யூ ஹோலார்ட் ஆகியோர் தலா 3 விக்​கெட்களை கைப்​பற்​றினர். இவ்​விரு அணிகளிடையி​லான 2-வது டி20 ஆட்​டம்​ நாளை (ஜூன்​ 28) இதே மைதானத்​தில்​ நடைபெறவுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply