ஆப்பிரிக்க ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த குல்வீர்

Priya
669 Views
2 Min Read

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தடகள களம் மீண்டும் ஒருமுறை இந்திய விளையாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அற்புதத் தருணத்தைக் கண்டுள்ளது. ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் கொட்டித்தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாமல், ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே 10,000 மீட்டர் ஓட்டத்தில் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 28 வயதான குல்வீர் சிங் பெற்றுள்ளார். போட்டித் தொடக்கம் முதலே மைதானத்தில் கனமழை பெய்து வந்ததால், ஓடு பாதை சவாலாக அமைந்தது. இருப்பினும், உத்வேகத்துடன் ஓடிய குல்வீர் சிங், தொடக்கம் முதலே முன்னணி வீரர்களின் குழுவிலேயே தொடர்ந்து பயணித்தார்.

கென்யாவின் டேனியல் எபென்யோ (2023-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர்) போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆப்பிரிக்க வீரர்கள் களம் கண்ட இந்தப் போட்டியில், அமெரிக்கப் பயிற்சியாளர் ஸ்காட் சிம்மன்ஸின் கீழ் பயிற்சி பெற்ற குல்வீர், மிகவும் நேர்த்தியான ஓட்ட வியூகத்தைக் கையாண்டார்.

போட்டியின் இறுதிச் சுற்றுகளில் தனது முழு வேகத்தையும் வெளிப்படுத்திய குல்வீர், ஐல் ஆஃப் மேன் நாட்டின் டேவிட் முல்லார்க்கியை மிகச்சிறிய இடைவெளியில் முந்தி, 27:49.78 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் தட்டிப்பறித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், 1986-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்குப் பிறகு, ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் ஆப்பிரிக்க வீரர்கள் அல்லாத வீரர் பதக்க மேடையை அலங்கரிப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2022-ம் ஆண்டு பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் கென்யாவின் நீண்டகால ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அந்த வரலாற்று நிகழ்வை, குல்வீரின் தற்போதைய சாதனை நினைவூட்டுகிறது.

உத்தர பிரதேசத்தின் அத்ரவுலி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான குல்வீர் சிங் வெற்றிக்கு பின்னர் கூறும்போது, “பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. பந்தயம் நன்றாக இருந்தது. போட்டியின் போது மழை பெய்தது. ஆனால் பதக்கம் வெல்வதற்கு மழை, வெயில், வெப்பம் எதுவுமே பொருட்டல்ல. நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். பந்தயத்துக்கு முன்பாக, ‘என்னைப் பார்த்துக்கொள்’ என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்.

இந்த போட்டி குறித்து எனது குடும்பத்தினரிடம் நான் எதுவும் தெரிவிக்கவில்லை. போட்டி நடைபெற்ற நேரம் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். பந்தயம் இருக்கும் நாட்களில் நான் அவர்களுக்குத் தொந்தரவு தருவதில்லை. இனிதான் அவர்களிடம் கூறுவேன். இப்போது எனது முழுக் கவனமும் அடுத்ததாக நடைபெற உள்ள 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் மீதுதான் உள்ளது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply