சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், நேற்று முன்தினம் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை’ சென்னை காவல்துறையில் தொடங்கினார்.
பொதுமக்கள் லஞ்சப் புகார்களை ‘7871723000’ என்ற எண்ணில் வாட்ஸ்அப் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், புகார் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், காவல் துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: எந்தவொரு சூழலிலும் நான் லஞ்சம் வாங்க மாட்டேன். அதேபோல காவல் துறையில் யார் லஞ் சம் வாங்கினாலும் அவர்களை தப்ப விடமாட்டேன்.
காவலர்கள் யாரும் உயர் அதிகாரிகளைக் குளிரவிக்கப் பணம் செலவு செய்யத் தேவையில்லை. எனக்காகவும் யாரும் எந்தவிதத் தேவையில்லாத செலவுகளையும் செய்ய வேண்டாம்.
காவல் நிலையத்துக்குப் புகாருடன் வருபவர்களின் மனுவில் உள்ள உண்மைத் தன்மையை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவர்களின் பின்னணியையோ, பண பலத்தையோபார்க்கக் கூடாது.
நமக்குக் கொடுத்த பணியை நேர்மையாகச் செய்வோம். தவறு செய்பவர்களுக்கு நான் ஒருபோதும் துணை நிற்கமாட்டேன். நேர்மையாகப் பணியாற்றி உங்களை நீங்களே நல்வழிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

