விசாகப்பட்டினத்தில் நேற்று பி.வி.சிந்து ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் அடிக்கல் நாட்டினார்.
இந்திய பாட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து கேட்டுக்கொண்டதற்கு இனங்க விசாகப்பட்டினத்தில் ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்க இடமும், அதற்கான அனுமதியையும் ஆந்திர அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில் பி.வி.சிந்து ஸ்போர்ட்ஸ் அகாடமியின் கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.
இதற்கான நிகழ்ச்சியில் ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நாரா லோகேஷ் கூறும்போது, “பி.வி. சிந்து அகாடமி மூலம் தங்களின் திறமையை வீரர்கள் மேலும் மெருகேற்றி கொள்ளலாம். எவ்வித ஊக்கமும் இல்லாத காலத்திலேயே பி.வி.சிந்து தன்னுடைய திறமை மூலம் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் பின்னாலும் அவர்களின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் இருப்பார்கள். அவர்களின் ஊக்குவிப்பும் மிக அவசியம். பி.வி. சிந்துவின் அகாடமி நமது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை தேடி தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

